ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது

by Staff Writer 25-03-2020 | 2:37 PM
Colombo (News 1st) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு வரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்திலும் , வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை 27 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. ஏனைய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் நாளை நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் பதிவேடு மற்றும் மருந்துகளுக்கான பற்றுச்சீட்டுகளை ஊரடங்கின் போது பயன்படுத்தக்கூடிய அனுமதிப்பத்திரங்களாக கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஔடதங்களை கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த காலப்பகுதியில் பாரிய மன உளைச்சலுக்க ஆளாகக் கூடும் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் போதைப் பொருள் கல்வி மற்றும் தகவல் அதிகாரி பஷீர் எம் ரஷாட் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்