இந்தியாவில் 511 பேருக்கு தொற்று:10 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 511 பேருக்கு கொரோனா தொற்று: 10 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 24-03-2020 | 6:40 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 511 ஆகவும், உயிரிழப்புகள் 10 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து 144 தடையுத்தரவு அமுலுக்கு வந்துள்ளது. இதனடிப்படையில், மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வதுடன் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வௌியேறுமாறும் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், நோய் அறிகுறிகள் தென்படுமிடத்து, வைத்தியர்களை சந்தித்து பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வௌிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களை விமான நிலையத்திலேயே பரிசோதனைக்குட்படுத்தி, தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் வீடுகளுக்குள் இருந்து ஒத்துழைப்பு வழங்குமிடத்து, அரசு என்ற ரீதியில் கொரோனா தொற்று பரவலடைவதை தம்மால் கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்தியாவின் 30 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 548 மாவட்டங்கள் உள்ளடங்குகின்ற நிலையில், அவை முற்றாக முடங்கிப்போயுள்ளன. கொரோனா வைரஸ் பரவலடைவதைக் கட்டுப்படுத்துவதற்காக எவ்விதமான தளர்வுமின்றி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ள மாநிலமாக பஞ்சாப் மாநிலம் பதிவாகியுள்ளது.