கொரோனா தடுப்புத் திட்டத்திற்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானம்

கொரோனா தடுப்புத் திட்டத்திற்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானம்

கொரோனா தடுப்புத் திட்டத்திற்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2020 | 7:59 pm

Colombo (News 1st) கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான திட்டத்திற்கு கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டங்களை நடத்தி கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்கு அவர்களது அலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமான போது பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.

பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளும் சுகாதார அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் இதன்போது கருத்துக்களை முன்வைத்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்றத்தைக் கூட்டுவதை விட மக்களுக்கு முன்னுதாரணம் வழங்கும் வகையில் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளடங்கும் வகையில் தேசிய திட்டமொன்றுக்கு பங்களிப்பு செய்வதே மிகவும் ஏற்புடையதென்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக அமைந்ததென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்