மன்னார் மக்களும் ஆராதனையில் கலந்துகொண்டதாக தகவல்

சுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனையில் மன்னாரை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது

by Staff Writer 23-03-2020 | 6:19 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அரியாலையில் சுவிட்சர்லாந்து போதகர் முன்னெடுத்த ஆராதனையில் மன்னாரைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது. இதற்கமைய, நானாட்டான் மற்றும் மடு பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திடீர் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நானாட்டான் மற்றும் மடு பிரதேசங்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆராதனையில் பங்குபற்றியவர்கள் இருந்தால் அவர்களை தமது கவனத்திற்குக் கொண்டு வருமாறு நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பட் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என நானாட்டான் பிரிவில் அடையாளம் காணப்பட்ட 5 குடும்பங்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று, மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மடு மற்றும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ளவர்களில் யாராவது யாழ்ப்பாணம் சென்று குறித்த மத நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை தொடர்பில் அறிந்திருந்தால் உடனடியாக பொது சுகாதார பிரிவினருக்கு அறியத்தருமாறு பொது சுகாதார வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.