அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டல் கோவை அனுப்பி வைப்பு

அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு வழிகாட்டல் கோவை அனுப்பி வைப்பு

by Staff Writer 23-03-2020 | 6:37 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி, அரச பொறிமுறையைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான வழிமுறைகள், அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் , பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலாளரினால் இன்று இந்த வழிகாட்டல் கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரச ஊழியர்கள் தமது வீடுகளில் இருந்து சேவையாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொலைபேசியூடாக அல்லது குறுந்தகவலூடாக நிறுவன தலைவரினால் ஊழியர்களுக்கான பணிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதி அரச விடுமுறை அல்லவெனவும் வீட்டிலிருந்து பணி செய்வதற்கான வாரம் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதனூடாக அனைவரும் ஆரோக்கியத்துடன் பணியாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையான மின்சாரம், தொலைபேசி, எரிபொருள், வங்கி நடவடிக்கைகள், போக்குவரத்து, பொருள் விநியோகம் ஆகியவற்றை தொடர்ந்தும் தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கு இந்த பொறிமுறை உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மதுபானசாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் கூடுவது, சுற்றுலாக்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நாட்டிற்கு தேவையானளவு உணவு, நீர் மற்றும் எரிபொருள் கையிருப்பிலுள்ளதுடன், அவற்றை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேவைக்கு அதிகமாக பொருட்களை சேகரிப்பதைத் தவிர்ப்பது அனைவரதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. வீட்டிலிருக்கும் நாட்களை, அத்தியாவசிய செய்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படுத்துமாறும், வீடு மற்றும் சூழவுள்ள பகுதியை சுத்தமாகப் பேணுமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிள்ளைகள் மற்றும் முதியோர் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம், தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு தனியாக சந்தைக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.