COVID -19 தனிமைப்படுத்தற்குரிய நோயாக அறிவிப்பு

COVID -19 தனிமைப்படுத்தற்குரிய நோயாக அறிவிப்பு: 82 பேர் பாதிப்பு

by Staff Writer 22-03-2020 | 3:49 PM
Colombo (News 1st) கொரோனா நோய் எனப்படும் COVID -19 வைரஸ் தாக்கத்தை தனிமைப்படுத்தற்குரிய நோயாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான விசேட வர்த்தமானியை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வௌியிட்டுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான சட்டத்தின் ஊடாக அமைச்சிற்குள்ள அதிகாரத்திற்கு அமைய, இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இவர்களில் 03 பேர் வௌிநாட்டவர்கள் என சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 222 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 6 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும் காலி , பதுளை, கேகாலை , குருநாகல், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நோயாளியும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களைத் தவிர 31 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பின் போது கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவாக கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி பயன்படுத்தப்படவுள்ளது. சுமார் 30 பிரிவுகளை இங்கு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரிக்குத் தேவையான மருத்துவக் குழாமை தேசிய வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலிருந்து அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதற்கமைய, கொரோனா தொற்றுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவாக கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியை பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்