கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு: யாழில் முதலாவது நோயாளர் பதிவு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு: யாழில் முதலாவது நோயாளர் பதிவு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2020 | 7:59 pm

Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பிற்பகல் வரை பதிவாகியிருந்த 78 நோயாளர்களை அடிப்படையாகக் கொண்டு தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தரவுகளை வௌியிட்டுள்ளது.

தேசிய தொற்றுநோயியல் பிரிவில் 70 பேர், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 7 பேர் என அந்த சந்தர்ப்பத்திலும் 77 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுவரை கண்டறியப்பட்ட நோயாளர்களின் விபரம்

கொழும்பு – 16
கம்பஹா – 10
புத்தளம் – 6
களுத்துறை – 4
இரத்தினபுரி – 3
குருநாகல் – 1
காலி – 1
கேகாலை – 1
மட்டக்களப்பு – 1
பதுளை – 1
தனிமைப்படுத்தல் நிலையங்களில் – 31
வௌிநாட்டவர்கள் – 3 (சீனா, இந்தியா, பிரான்ஸ்)

மொத்தம் – 78

இதனைத் தவிர யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளர் இன்று பதிவானார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து வருகை தந்து, அரியாலையில் ஆராதனை நிகழ்வில் ஈடுபட்ட மத போதகரை சந்தித்த ஒருவருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த மத போதகரும் கொரோனா தொற்று காரணமாக சுவிட்சர்லாந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 3,400 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவிலுள்ள விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இன்று சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் 522 ஆவது படைப்பிரிவு முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கொடிகாமம் 522 ஆவது படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி – இரணைமடு விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று (21) சிலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தியாவிற்கு யாத்திரிகர்களாக சென்று நாடு திரும்பியவர்களில் ஒரு தொகுதியினர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அவர்களை ஏற்றிய வாகனங்கள் பயணித்த பகுதியான கிளிநொச்சி நகரை அண்டிய கிளிநொச்சி குளத்தின் கரையில் கழிவுகள் வீசப்பட்டுள்ளன.

தண்ணீர் போத்தல்கள், பால் பக்கெட்கள் மற்றும் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுப்பொதிகளும் இதில் காணப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்