by Staff Writer 22-03-2020 | 3:10 PM
Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, காயமடைந்த மேலும் 6 பேர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைச்சாலைக்குள் இருந்த சில கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு, பொது சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது, கைதி ஒருவர் தப்பிச்செல்ல முயற்சிக்கையில், சிறைச்சாலை அதிகாரியால் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் போது சிறை அதிகாரிகள் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தாம் கலந்துரையாடியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.