ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது

by Staff Writer 21-03-2020 | 8:14 PM
Colombo (News 1st) பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் நாட்டின் சில இடங்களில் சட்டத்தை மீறிய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை, ஹப்புத்தளை, தம்புள்ளை, வலஸ்முல்ல, நல்லதண்ணி, அம்பாறை, உஹன, பண்டாரகம, அக்மீமன, கருவலகஸ்வெவ உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் சில இடங்களில் பொலிஸ் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நகருக்குள் பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டதையும் இன்று காண முடிந்தது. வென்னப்புவ பகுதியில் கோழி இறைச்சி உற்பத்தித் தொழிற்சாலையொன்று பொலிஸ் ஊரடங்கு சட்டத்தையும் மீறி இன்று நடத்திச் செல்லப்பட்டது. இது குறித்து வென்னப்புவ பொலிஸ் நிலையம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று அந்த இடத்தை சோதனைக்கு உட்படுத்தினர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமண தேசிய சரணாலயத்தில் புதையல் அகழ்வதற்கு சென்ற ஐவரை வன ஜீவராசிகள் அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். குமண குளத்திற்கு அருகில் வைத்து இரண்டு துப்பாக்கிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடையே லாஹூகல முன்னாள் பிரதேச அரசியல்வாதியொருவரின் சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு சென்றபோது மேலும் இருவர் தப்பியோடியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் - ஷெனன் பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட கிரவல் கடத்தலை சுற்றிவளைப்பதற்கு மாரவில பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். பிரதேசவாசியொருவர் வழங்கிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கடத்தல் பல காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன், அனுமதிப் பத்திரம் இன்மையால் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்ததது. கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளுக்குத் தெரியாமல், கடத்தல்காரர் மீண்டும் இந்த செயற்பாட்டை இன்று ஆரம்பித்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் செல்வதற்கு முன்னர் அந்த இடத்திலிருந்த சில டிப்பர் வாகனங்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டதுடன், பொலிஸார் சென்ற சந்தர்ப்பத்தில் இரண்டு பெக்கோ இயந்திரங்கள் மாத்திரமே அங்கு காணப்பட்டன. பெக்கோ இயந்திரங்களின் சாவிகளை மாரவில பொலிஸார் பெற்றுக்கொண்டதுடன், கடத்தல்காரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.