ஸ்பெய்னில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 324 பேர் உயிரிழப்பு

ஸ்பெய்னில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 324 பேர் உயிரிழப்பு

ஸ்பெய்னில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 324 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Mar, 2020 | 7:54 pm

Colombo (News 1st)  ஸ்பெய்னில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 324 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1326 ஆக பதிவாகியுள்ளது.

ஸ்பெய்னில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் அதிகமானோர் உயிரிழந்த தினமாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்தில் ஸ்பெய்னில் 235 உயிரிழப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டிருந்தன.

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,705 ஆல் உயர்வடைந்து 16,662 ஆகப் பதிவாகியுள்ளது.

ரொபேர்ட் கொக் தொற்றுநோய் வைத்திய நிறுவகம் இந்தத் தகவலை இன்று வௌியிட்டுள்ளது.

இதேவேளை, ஜெர்மனியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 16 உயிரிழப்புகள் பதிவாகியதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஈரானில் கொரோனா தொற்றினால் நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் புதிதாக சம்பவித்துள்ளன.

இதனையடுத்து, ஈரானில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,556 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20, 610 ஆக அதிகரித்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிற்கு வௌியே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக ஈரானும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,75,000 -ஐ தாண்டியுள்ளது.

இவர்களில் சுமார் 90,000 பேர் நலமடைந்துள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியாவில் களியாட்ட நிலையங்கள், உணவகங்கள், சிற்றுண்டியகங்கள் அனைத்தையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தினால், வர்த்தகத் தலைவர்கள் எதிர்நோக்கவிருந்த நெருக்கடி நிலை குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சிட்னி அதன் பிரபலமான கடற்கரைகளை மூடியுள்ளது.

அதேபோல், அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள் முடக்கல் உத்தரவைப் பிறப்பித்துள்ளன.

ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்கர்களை விரைவில் வீடுகளிலேயே தரித்திருக்கச் செய்யும் பணிப்புரையுடன், இந்த முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிகட், நியூ ஜேர்ஸி குடியிருப்பாளர்களை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களை மூடுமாறு நியூயார்க் மாநிலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் COVID-19 வைரஸ் தொற்றினால் 230 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,500-க்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்