ஹட்டனில் 76 பேர் வீடுகளிலிருந்து வௌியேறத் தடை

ஹட்டனில் 9 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் 76 பேர் வீடுகளில் இருந்து வௌியேற நீதிமன்றம் தடை 

by Bella Dalima 20-03-2020 | 5:44 PM
Colombo (News 1st) ஹட்டன் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட 9 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் 76 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்பகமுவ சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சுற்றுலா பஸ்கள், வேன்கள் என்பன ஹட்டன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் ஒன்றுகூடும் வகையிலான நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களுக்கும் ஹட்டன் நீதவான் ஜெயராமன் டிரொக்சி தடை விதித்துள்ளார். இதேவேளை, சுற்றுலா விடுதிகள், பொது மலசலக்கூடங்கள், பஸ்கள் ஆகியவற்றில் கிருமி ஒழிப்புகளை முன்னெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அங்காடிகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் ட்ரொலி மற்றும் கூடைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹட்டன் தலைமையக பொலிஸ், மஸ்கெலியா, நோர்வூட், நல்லதண்ணி, பொகவந்தலாவை, கினிகத்ஹேன, நோர்டன் பிரிட்ஜ், வட்டவல மற்றும் திம்புலபத்தன ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை அமுலில் இருக்கும் எனவும் ஹட்டன் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்