நிர்பயா கொலைக் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் 

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் 

by Bella Dalima 20-03-2020 | 4:23 PM
  Colombo (News 1st) டெல்லி நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு 7 வருடங்களின் பின்னர் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகளான அக்சய் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் இன்று காலை 5.30 அளவில் திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 2015 இன் பின்னர் இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தூக்கிலிடப்படுவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், தண்டனையை நிறைவேற்றக்கூடாது என கோரிய கடைசி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2012 இல் டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த ஆறு பேருக்கு எதிராக 2013 இல் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஒருவர் 2013 இல் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்து கொண்டார். 18 வயது நிரம்பாத மற்றுமொரு சந்தேகநபர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு மூன்று வருடங்களில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், நீதிக்கான தமது காத்திருப்பு வேதனையளித்திருந்தாலும் இறுதியில் நீதி கிடைத்தமை வெற்றி என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறியுள்ளார். இந்த தண்டனை தொடர்பில் நீதித்துறைக்கும் அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.