கடும் பாதிப்பை சந்தித்துள்ள பொருளாதாரம்: ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

by Staff Writer 20-03-2020 | 9:05 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்ததுடன், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக இந்த வாரம் முழுவதும் கொழும்பு பங்குச்சந்தையில் சடுதியான சரிவு ஏற்பட்டது. S&P SL 20 சுட்டெண் 5 வீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்ததால் இன்று ஐந்தாவது நாளாகவும் பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களை தற்காலிகமாக இடை நிறுத்த நேரிட்டது. இன்று பங்குச்சந்தையில் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் 6.22 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, இன்று நண்பகல் 12 மணியளவில் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. நாடளாவிய ரீதியில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக உரிய நேரத்திற்கு முன்னதாகவே சந்தை நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இன்று பங்குச்சந்தையின் மொத்த புரள்வு 420.8 மில்லியன் ரூபாவாக பதிவானது. கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதன் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மையால் கொழும்பு பங்குச்சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில் விலைச்சுட்டெண் 12 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியும் சடுதியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கு அமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 186.93 சதமாக அமைந்திருந்தது. தற்போதைய நிலையில் கடந்த 10 நாட்களில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி சுமார் 3 வீதத்தால் குறைவடைந்துள்ளது. இதேவேளை, கொரோனா பரவுவதால் நாணய மாற்று வீதத்திற்கு ஏற்படுகின்ற அழுத்தத்தை இலகுபடுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி நேற்று சில துரித நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. உடன் அமுலுக்கு வரும் வகையில், அடுத்த 3 மாதங்களுக்கு 2020 இலக்கம் 1 கட்டளையின் மூலம் நீக்கப்பட்டுள்ள வாகனங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ரக வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான வசதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனைத் தவிர வௌிநாட்டு நாணய மாற்று நடவடிக்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் பயணச் செலவுகளுக்காக விநியோகிக்கக் கூடிய வௌிநாட்டு நாணயத்தின் அளவை 5000 அமெரிக்க டொலருக்குள் மட்டுப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக டொலரின் பெறுமதி 188 ரூபா என பதிவாகியுள்ளமை உண்மை. உலகில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 130 ரூபா செலுத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 132 ரூபா. நல்லாட்சி அரசாங்கம் பட்டப்பகலில் மத்திய வங்கியை கொள்ளையிட்டமையால் டொலரொன்றுக்கு 131 ரூபா செலுத்தப்பட்டது. நாம் 144 ரூபாவை செலுத்தினோம். வருடமொன்றுக்கு 13 ரூபா மேலதிகமாக செலுத்த நேரிட்டது. 2015 ஆம் ஆண்டு 144 ரூபா. 2016 ஆம் ஆண்டு 150 ரூபாவாக அதிகரித்தது. 6 ரூபா மேலதிகமாக செலுத்த நேரிட்டது. 2018 ஆம் ஆண்டு 153 ரூபா. மேலதிகமாக 3 ரூபாவை செலுத்த நேரிட்டது. 2018 ஆம் ஆண்டு 182 ரூபாவானது. டொலரொன்றுக்கு 29 ரூபாவை மேலதிகமாக செலுத்த நேரிட்டது. 2019 ஆம் ஆண்டு 184 ரூபாவாக அதிகரித்தது. உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போது டொலரொன்றின் பெறுமதி 188 ரூபாவாக மாறியுள்ளது