ஊரடங்கு சட்டத்தால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சந்தைகள், வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்ற மக்கள்

by Bella Dalima 20-03-2020 | 8:42 PM
Colombo (News 1st) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என இன்று காலை 9 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றதைக் காண முடிந்தது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம், மத்திய பஸ் தரிப்பு நிலையம் மற்றும் கொழும்பு பிரதான தனியார் பஸ் நிலையம் ஆகியன இன்று பகல் சனசந்தடி மிக்க இடங்களாகக் காணப்பட்டன. இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர கொழும்பு கோட்டை தனியார் பஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார். ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பைப் போன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ளவர்களும் நகர்ப்புறங்களை நோக்கிச் சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சந்தைகள் மற்றும் வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது.