வீட்டிலிருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானம்

by Staff Writer 20-03-2020 | 3:20 PM
Colombo (News 1st) அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்காமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்த பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று முதல் மாதிரி திட்டமாக இதனை சில நிறுவனங்களில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரசாங்கம் மற்றும் தனியார் ஆகிய இரண்டு தரப்பிற்கும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் பின்னடைவில்லாமல் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களுக்கு வருகை தராமல் தொலைபேசி அழைப்புகளின் ஊடாக சேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பின்னடைவில்லாமல் நடத்திச் செல்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார். இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டாலும் 21, 22 ஆம் திகதிகளைத் தவிர ஏனைய நாட்கள் அரசாங்க விடுமுறையாகக் கருதப்படாது என ஜனாதிபதி செயலாளர் அனுப்பிய சுற்றநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாவட்ட செயலகங்களினதும் பிரதேச செயலகங்களினதும் கடமைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.