பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

by Staff Writer 19-03-2020 | 6:17 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும் இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ் தேசிய பசுமை இயக்கம் இம்முறை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடுகின்றது. வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ​வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதன்மை வேட்பாளர் கணேஷ் வேலாயுதம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ரிஷாட் பதியுதீன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின் மனைவி வித்தியாபதி முரளிதரன் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஐக்கிய சமாதானக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லா மற்றும் பசீர் சேகுதாவுத் ஆகியோர் இணைந்து இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் அமீர் அலி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கிழக்கு தமிழர் ஒன்றியம் சார்பில் போட்டியிடும் அருண் தம்பிமுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பைசல் காசிம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேவேளை, தேசிய காங்கிரஸ் தலைவர் A. L. M. அதாவுல்லா, திகாமடுல்லை மாவட்டத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் எம். வேலுகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.