நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு 

by Staff Writer 19-03-2020 | 5:32 PM
Colombo (News 1st) COVID 19 தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தவிர 243 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 81 வீதமானவர்கள் ஆண்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானவர்கள் இலங்கையர்கள் எனவும் அவர் கூறினார். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கும் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதற்கமைய, வைத்தியசாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், முல்லேரியா வைத்தியசாலையில் நாளை தொடக்கம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார். இதேவேளை, இந்தியாவிற்கு யாத்திரை சென்று அங்கு தங்கியுள்ளவர்களை அழைத்து வர இதுவரையில் விசேட விமானம் அனுப்பி வைக்கப்படவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். எனினும், இந்தியாவிற்கு சென்றுள்ள ஶ்ரீலங்கன் விமான சேவைக்குரிய விமானங்களில் அவர்களை அழைத்து வருவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார். இதனிடையே, 8,431 பேர் தங்களின் வீடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வௌிநாடுகளில் இருந்து வருகை தந்து, தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு செல்லாதவர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.