by Staff Writer 19-03-2020 | 5:41 PM
Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த நாட்டிற்கு மீள செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சுற்றுலா மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 38 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நாட்டில் தங்கியுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.
இவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக எமிரேட்ஸ் நிறுவனம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாளாந்தம் 4 தடவைகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் வரை இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள சில நாடுகளுக்கு ஶ்ரீலங்கன் விமான சேவை தனது விமான போக்குவரத்தை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மையில் விமானம் ஊடாக வருகை தந்த 2621 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.
200 பேர் இன்றும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஷெஹான் சுமனசேகர சுட்டிக்காட்டினார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வருகை தரும் அனைத்து விமானங்களுக்கும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
வெளிநாடு செல்பவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.
பயண வழிமாற்ற விமானங்களுக்கு தடை விதிக்கப்படாத போதிலும், குறித்த விமானப் பயணிகளுக்கு விமான நிலையத்திலிருந்து வௌியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சரக்கு விமானங்களின் சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.