உலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படாது - பந்துல தெரிவிப்பு

by Staff Writer 19-03-2020 | 8:16 PM
Colombo (News 1st) COVID 19 உலகளவில் தாக்கம் செலுத்தியுள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், விலை வீழ்ச்சியின் சலுகை நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இது விலைச்சூத்திரம் இல்லை. வருடாந்தம் மாற்றம் அடைவதைப் போன்றதொரு மாற்றம் இல்லை. சர்வதேசத்தில் விலை அதிகரித்தாலும் விலை குறைவடைந்தாலும் இந்த விலையை ஸ்திரமாகப் பேணுவதற்கு அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இலாபம் அதிகரித்துள்ள நிலையில், அந்த நிதியை சேமித்து நட்டத்தை ஈடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றது. 200 பில்லியனை சேமித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த எதிர்பார்க்கிறோம்
என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்.
எண்ணெய் விலை குறையாது என்று நான் தெரிவிக்கவில்லை. தற்போது அத்தியாவசியப் பொருட்கள் இரண்டின் விலை குறைக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர்காலத்தில் மின் கட்டணம் அல்லது எரிபொருளின் விலையைக் குறைப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். கட்டாயம் நாங்கள் அந்த சலுகையைப் பெற்றுத் தருவோம்
என மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.