by Staff Writer 19-03-2020 | 1:16 PM
Colombo (News 1st) நாளை (20) தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் ஆகிய இரு பிரிவுகளுக்கும் இந்த அறவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21, 22 ஆம் திகதிகளைத் தவிர ஏனைய நாட்கள் அரசாங்க விடுமுறையாகக் கருதப்படாது என அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் அனுப்பிய சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வமான நிறுவனங்கள், உள்ளரங்க முறைமையை கடைப்பிடித்து குறித்த வாரத்தில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி செயலாளர் அனுப்பிய சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரம், உள்ளூராட்சி, போக்குவரத்து, வங்கி, உணவு, தண்ணீர், மின்சாரம் ஆகிய சேவைகளும், உர விநியோகம், நெல் கொள்வனவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகங்களினதும் பிரதேச செயலகங்களினதும் கடமைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
தூரமாக்கும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் போது நிறுவனத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைப்பதனை இயலுமானவரையில் மட்டுப்படுத்த வேண்டியதுடன் மின்னஞ்சல், குறுந்தகவல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகளையும், கடிதங்களைப் பெற்றுக்கொள்ளும் மாற்று வழிகளையும் பின்பற்றலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அலுவலகங்களில் கூடுவதை தவிர்க்கவும், பொதுமக்களின் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தொழில்நுட்ப வழிமுறைகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் விடுத்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது, தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மேலதிக செலவுகள் ஏற்படுமானால் அரசாங்கம் அதற்கு மானியம் வழங்கும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
தனியார் துறையும் குறித்த வழிமுறைகளை பின்பற்றி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு சகல வர்த்தக மையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.