புத்தளத்திற்கான ரயில் சேவைகள் இரத்து

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்படவுள்ளன

by Staff Writer 18-03-2020 | 3:45 PM
Colombo (News 1st) புத்தளம் நோக்கி இன்று மாலை 5.30-க்கு புறப்படும் ரயிலை தவிர புத்தளம் மார்க்கத்திலான ஏனைய ரயில்கள் நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்படவுள்ளன. புத்தளம் பொலிஸ் பிராந்தியத்தின் 11 பொலிஸ் பிரிவுகளுக்கும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவுகளுக்கும் இன்று 4.30 முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதனை கருத்திற்கொண்டு ரயில் சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பயன்பாட்டிற்காக முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இதற்கமைய, 10,000 கையுறைகளும் முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதில் ஒரு பகுதி கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலைய அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பாதுகாப்பு உபகரணங்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லையென ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்தார். முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் முறையாக வழங்கப்படாதவிடத்து, அனுமதிச் சீட்டுக்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும் என அவர் கூறினார். இதனிடையே, இன்று 86 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.