கொரோனா : ஐரோப்பிய ஒன்றியம் அதன் எல்லைகளை மூடியது

கொரோனாவின் தாக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அதன் எல்லைகளை மூடியது

by Staff Writer 18-03-2020 | 8:43 AM
Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியம் அதன் எல்லைகளை 30 நாட்களுக்கு மூடவுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைப்பிலுள்ள நாடுகளின் பிரஜைகளைத் தவிர வௌிநபர்கள் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வருவதைத் தடைசெய்யும் எதிர்பாராத நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன், ஐஸ்லாந்து, லெற்றென்ஸ்ரைன், நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பிரஜைகளைப் பாதிக்காது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் ஆகியவற்றில் கொரோனாவினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையிலும், பிரான்ஸ் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலும் இந்தத் தடை அமுலுக்கு வருகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் 185,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக பிரஜைகளுக்கு நிதியுதவியை நேரடியாக வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒரு ட்ரில்லியன் டொலர் நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேஸிலில் கொரோனாவினால் ஏற்பட்ட முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. வேகமாக பரவலடையும் கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணைந்த அமர்வினை பிரேஸில் பாராளுமன்றம் நிறுத்தியுள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரிசோதனை இரண்டாவது முறையாகவும் பிரேஸில் ஜனாதிபதியிடம் மேற்கொள்ளப்படுகின்றது. முதலாவது பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லையென்ற நிலையில், தற்போது மீண்டும் அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், இன்றையதினம் அதன் அறிக்கை கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஈரானில் கொரோனா தொற்றினால் 135 புதிய உயிரிழப்புகள் பதிவாகியதைத் தொடர்ந்து, அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,178 ஆக பதிவாகியதுடன், மொத்த எண்ணிக்கை 16,169 ஆக அதிகரித்துள்ளது.