by Staff Writer 17-03-2020 | 5:15 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கருத்து வௌியிட்டார்.
முழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதாக தாம் நினைக்கவில்லை என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
வௌிநாடுகளில் இருந்து வருவோரை பெரும்பாலும் தடுத்துள்ள நிலையில், அனைவரையும் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் தீர்மானத்தை விரைவில் எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மார்ச் 10 ஆம் திகதியிலிருந்து இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களையும் அவர்கள் இருக்கும் இடங்களைத் தேடிச்செல்லும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் வீட்டினுள் இருப்பதால் இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நோய்த்தொற்று தொடர்பில் எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்படுபவர்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது கவலை வௌியிட்டார்.
தொற்றுக்குள்ளானவர்களை ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி கண்காணித்தால் இலகுவில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நம்பிக்கை வௌியிட்டார்.