கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு
by Staff Writer 17-03-2020 | 7:13 PM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் தொற்றுக்குள்ளான ஆறு பேர் உறுதி செய்யப்பட்டனர்.
இதேவேளை, COVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுமக்கள் அச்சமடையாது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடும் பட்சத்தில், தொற்றுக்குள்ளாவதிலிருந்து தப்ப முடியும் என அவர் கூறினார்.
இதேவேளை, 16 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்களினூடாக 2258 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இன்று ஸ்தாபிக்கப்பட்ட COVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினூடாகவே அனைத்து அறிக்கைகளும் வௌியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மார்ச் 01 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வௌிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
தற்போதைய நிலையில் இவர்களூடாக கொரோனா தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 1500 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
இவர்களில் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
ஆகவே, வௌிநாடுகளில் இருந்து வருகை தந்து புத்தளம் மாவட்டத்தில் வசிப்போர் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீடுகள் பாதுகாப்பு படையினரால் அடையாளப்படுத்தப்படவுள்ளது.
குறித்த வீடுகளுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதனூடாக கிராமத்திலுள்ள ஏனையவர்கள் அறிந்துகொள்ள முடியும் என இராணுவத் தளபதி கூறினார்.
இதேவேளை, யாத்திரைகளுக்காக இந்தியாவிற்கு சென்றுள்ள 800 பேர் அங்கு தங்கியுள்ளனர்.
இவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக COVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றாதவர்கள் தொடர்பிலும், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் தொடர்பிலும் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் இதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவிற்கு இதுவரை சுமார் 3000 பேரிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும், வௌிநாடுகளில் இருந்து வருகை தந்து, தனிமைப்படுத்தி கண்காணிப்பில் ஈடுபடாத 558 பேர் பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட பிரிவு செயற்பாட்டிலுள்ளது.
0112 - 44 44 80
0112 - 44 44 81
011 59 78 730
011 59 78 734
011 59 78 720
ஆகிய இலங்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு இவ்வாறான தகவல்களை வழங்க முடியும்.
இதேவேளை, தொற்று ஏற்பட்டுள்ளவர் அதனை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபரான சுற்றுலா வழிகாட்டியின் உடல்நிலை தற்போது ஓரளவு தேறியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான நோயாளர்களுள் பாரதூரமான நிலையில் அவர் மாத்திரமே காணப்பட்டார்.
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் இன்று நண்பகல் வரை, கொரோனா தொற்றுக்குள்ளான 27 பேர் சிகிச்சை பெற்று வந்ததுடன், அவர்களில் ஒருவர் இந்திய பிரஜையாவார்.
நோயாளர்களுள் 13 வயதான சிறுமி ஒருவரும் அடங்குகின்றார்.
இவர் நோய்த்தொற்றுக்குள்ளான இரண்டாவது சுற்றுலா வழிகாட்டியின் மகளாவார்.
இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு சமமான பிரிவொன்று, பொலன்னறுவை - வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.