கொரோனாவின் தாக்கம் ; மலேசிய பிரதமர் விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்

கொரோனாவின் தாக்கம் ; மலேசிய பிரதமர் விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்

கொரோனாவின் தாக்கம் ; மலேசிய பிரதமர் விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2020 | 1:16 pm

Colombo (News 1st) கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், நாட்டை 2 வாரங்களுக்கு முடக்குவதாக மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார்.

மலேஷியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதவழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மலேஷிய பிரதமர் முஹ்யிட்டினி யாசின் அறிவித்துள்ளார்.

பாரியளவில் ஒன்றுகூடுவதற்கும் மலேஷியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய சேவைகளான மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன மாத்திரம் திறந்திருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மலேஷிய பிரஜைகள் எவரும் வௌிநாடுகளுக்குப் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், வௌிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்புவர்கள் கட்டாயம் 14 நாட்களுக்குத் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேஷியாவில் கடந்த 2 நாட்களில் புதிதாக 315 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 553 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்காசிய நாடொன்றில் அதிகளவானோர் தொற்றுக்குள்ளான நாடாக மலேஷியா பதிவாகியுள்ளது.

புதிதாகத் தொற்றுக்குள்ளாவோர் கோலாலம்பூரில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களாவர்.

இந்த நிகழ்வில் 16000 பேர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே சமயநிகழ்விற்காக வருகைதந்த பதினொருவருக்கு கம்போடியாவில் தொற்று ஏற்பட்டுள்ளது.

கம்போடியாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் பதினொருவரே இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களாவர்.

இதனையடுத்து கம்போடியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 24 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளது.

மகாராஷ்டிராவிலேயே அதிகளவிலானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அங்கு 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கடுத்து கேரளாவில் 24 பேரும் உத்தர பிரதேஷில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொற்றுக்குள்ளான ஒருவர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்குடன் தாஜ்மஹால் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மூடப்படுவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் செங்கன் நாடுகளூடாக பயணிப்பதற்குத் தடை விதிக்க ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்றைய தினத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்