by Staff Writer 16-03-2020 | 2:55 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று (16) புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் ஒருவர், நாட்டில் இரண்டாவதாக தொற்றுக்குள்ளான சுற்றுலா வழிகாட்டியின் 13 வயதுடைய மகள் ஆவார்.
மற்றைய நோயாளி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய அதிகாரியாவார்.
அவர் தற்போது தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 8 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டவர்கள் உள்ளிட்ட 1700 இற்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது 12 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி கூறினார்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பிய இருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் 40 பேர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.