கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 14-03-2020 | 3:39 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 ஆக  அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வவுனியா - கந்தகாடு தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 42 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இத்தாலியில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 56 வயதான ​பெண் ஒருவருக்கும் அவரின் உறவினரான 17 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தொற்றுநோயியல் பிரிவில் 35 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் ஒரு வெளிநாட்டவரும் அடங்குகின்றார். தேசிய வைத்தியசாலையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதுடன், ராகம போதனா வைத்தியசாலையில் ஆறு பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரும் அடங்குகின்றார். கராப்பிட்டி வைத்தியசாலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குருநாகல் வைத்தியசாலையில் 16 பேரும் கண்டி வைத்தியசாலையில் 4 பேரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருவர் சிகிச்சை பெறுவதுடன், கம்பஹா வைத்தியசாலையில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஆறு பேர் சிகிச்சை பெறுவதுடன், இரத்தினபுரி வைத்தியசாலையில் மூவரும் பதுளை வைத்தியசாலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மூவர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் போலந்து நாட்டைச் சேர்ந்த நால்வர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த குறித்த 4 பேரிடமும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதாக விமான நிலையத்தின் சுகாதார மருத்துவப் பிரிவினர் குறிப்பிட்டனர். வௌிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களை 14 நாட்களுக்குள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் செயற்பாடுகளுக்காக மற்றுமொரு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வவுனியா - பம்பைமடுவில் அந்த கண்காணிக்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார். அத்துடன், தியத்தலாவை, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், புனானை, கந்தக்காடு நிலையங்களில்,வௌிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நிலையங்களில் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த 1720 பேர் உள்ளனர். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான அனைத்து சோதனைகளும் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுகின்றமையால், மேலும் சில நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார். ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன், பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஆஸ்திரியா, கட்டார், பஹ்ரேன் நாடுகளின் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு, சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் நேற்று அறிவித்தார். .