சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

முறிகள் மோசடி: ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

by Staff Writer 13-03-2020 | 3:41 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களை இன்று மாலை 4 மணிக்கு முன்னர் கொழும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க வேண்டாம் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத சந்தேகநபர்கள் தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நிலைப்பாட்டிற்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான பரிசீலனை இன்று இரண்டாவது நாளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் , நீதிபதி A.H.M.D. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் ஷோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இந்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 17 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.