மனித புதைகுழி வழக்கில் மீளாய்வு மனு தாக்கல்

மன்னார் மனித புதைகுழி வழக்கில் மீளாய்வு மனு தாக்கல்

by Staff Writer 13-03-2020 | 5:22 PM
Colombo (News 1st) மன்னார் சதொச வளாக மனித புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை தொடர்பில் இன்று மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளால் இந்த மீளாய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. மனித புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என கடந்த 10 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் வௌிநாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் பெறப்பட்ட அறிக்கையை மாத்திரம் ஏற்றுக்கொள்ளாது, ஏனைய சான்றுப்பொருட்கள் தொடர்பிலும் அறிக்கை பெறும் வரை நீதிமன்றம் பொறுத்திருக்க வேண்டும் என மீளாய்வு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மீளாய்வு மனுவை பரிசீலிப்பதற்கு போதுமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கருதிய வவுனியா மேல் நீதிமன்றம், மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கமைய, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து, வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு அமுலில் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.