மட்டக்களப்பில் நோயாளியுடன் வருகை தந்த அம்பியூலன்ஸை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட 9 ​பேர் கைது

by Staff Writer 13-03-2020 | 8:02 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிக்குடியில் இருந்து நோயாளி ஒருவருடன் வருகை தந்த அம்பியூலன்ஸை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று காலை சிகிச்சைகளுக்காக சென்றிருந்த 47 வயதான நபருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள விசேட பிரிவிற்கு அம்பியூலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். இவ்வாறு அழைத்துவரப்பட்ட நபரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தி பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். எதிர்ப்பில் ஈடுபட்ட மக்களை அங்கிருந்து அனுப்புவதற்கு பொலிஸார் முயற்சித்த போதிலும், மக்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு, எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்களை வைத்தியசாலை முன்றலில் இருந்து அகற்றினர். இந்த சம்பவத்தை அடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சூழ விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். மட்டக்களப்பில் கொரோனா கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் இருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி, பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை பயணித்தது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். இந்த ஆபத்தான நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏன் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாட்டில் ஒரு சுமூக நிலைமையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கமானது மக்கள் செறிவற்ற பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது அறிக்கை ஊடாக வலியுறுத்தியுள்ளார்.