இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று 

by Staff Writer 13-03-2020 | 7:50 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஜெர்மனிக்கு சுற்றுலா சென்று நாட்டிற்கு வருகை தந்த 41 வயதான நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இவர் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கந்தகாடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்த 37 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர், பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை, கந்தகாடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த மற்றுமொருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்த 43 வயதான நபர் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளங்காணப்பட்ட நபர் பயணித்த இடங்கள் மற்றும் பழகிய நபர்களை அடையாளங்காணும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு மாநகர சபை மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக முதலில் அடையாளம் காணப்பட்ட இருவரும், பூரண மருத்துவ கண்காணிப்பின் கீழ், அங்கொடை தொற்றுநோயியல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 64 பேர், தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. தேசிய தொற்றுநோயியல் நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் 20 பேர் உள்ளனர். அவர்களுள் வௌிநாட்டவர் ஒருவரும் அடங்குகின்றார். தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதுடன், ராகமை போதனா வைத்தியசாலையில் ஐவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கராப்பிட்டிய வைத்தியசாலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குருநாகல், கண்டி வைத்தியசாலைகளில் தலா 7 பேர் வீதம் சிகிச்சை பெறுகின்றனர். அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒருவரும், யாழ். வைத்தியசாலையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பஹா மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் தலா 5 பேர் வீதம் சிகிச்சை பெறுவதுடன், இரத்தினபுரி , பதுளை வைத்தியசாலைகளில் ஒருவர் வீதம் சிகிச்சை பெறுகின்றனர். அத்துடன், சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இருவர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.