ஐரோப்பிய பிரஜைகளுக்கான விசா இடைநிறுத்தம்: பஸ்கள், ரயில்களை கிருமி ஒழிப்பு செயற்பாட்டிற்கு உட்படுத்த நடவடிக்கை

ஐரோப்பிய பிரஜைகளுக்கான விசா இடைநிறுத்தம்: பஸ்கள், ரயில்களை கிருமி ஒழிப்பு செயற்பாட்டிற்கு உட்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2020 | 8:17 pm

Colombo (News 1st) ஐரோப்பிய பிரஜைகளுக்கான விசா விநியோகத்தை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றை ஒழிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் இலங்கையர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்குமாறும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, மக்களின் ஒன்றுகூடல்கள் மற்றும் விழாக்களை வரையறுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியை ஸ்தாபித்து, தகவல்களை சேகரிப்பதனூடாக அடுத்த கட்ட தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

நிர்ணய விலையில் முகக் கவசங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாளொன்றுக்கு 1,50,000 முகக் கவசங்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பஸ்கள், ரயில்களை நாளை முதல் கிருமி ஒழிப்பு செயற்பாட்டிற்கு உட்படுத்த பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா ஒழிப்பு தொடர்பில் சீனா முன்னெடுத்த வழிமுறைகளை கண்காணிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை வீடுகளில் இருந்து இணையத்தளத்தினூடாக மேற்கொள்வது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மக்கள் பீதியடையாத வண்ணம் செயற்படுவது கட்டாயமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்