by Staff Writer 12-03-2020 | 8:59 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அநேகமான மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் கட்சியின் தேசிய சபை கூட்டத்தின் போது இறுதி செய்யப்படும் என கட்சியின் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்டத்திற்கான வேட்பாளர் அணியின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வேட்புமனுவில் நேற்று கையெழுத்திட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஐந்து இடங்களும் கண்டி, பதுளை மாவட்டங்களில் தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எத்தனை வேட்பாளர்களை களமிறக்குவது என்பது தொடர்பான தீர்மானம் கட்சியின் தேசிய சபைக் கூட்டத்தில் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து களமிறங்குவது தொடர்பில் சில தரப்புகளுடன் பேசி வருவதாகவும் மருதபாண்டி ராமேஸ்வரன் கூறினார்.
இதேவேளை, முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இம்முறை பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தனம் அருள்சாமியின் மகனும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பரத் அருள்சாமி கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார்.