புத்தளத்தில் இணைந்து போட்டியிட அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தீர்மானம்

by Staff Writer 12-03-2020 | 3:51 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (11) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான குழுவிற்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. இந்நிலையிலேயே இது தொடர்பில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, புத்தளம் மாவட்டத்தில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் ஒதுக்கீடு தொடர்பில் இரு தரப்பும் கலத்துரையாடி முடிவெடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.