நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

by Staff Writer 12-03-2020 | 2:44 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை (13) முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். இதனிடையே, கொழும்பிலுள்ள அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளும் நாளை (13) முதல் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை மூடப்படும் என கொழும்பு கத்தோலிக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அகில இலங்கை விரிவுரையாளர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பகுதி நேர வகுப்புக்களை நிறுத்துவதற்கு மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது. தற்போது எழுந்துள்ள சுகாதாரப் பிரச்சினை காரணமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்கு இணையாக, மார்ச் 27 ஆம் திகதி வரை இரண்டு வார காலத்திற்கு பகுதி நேர வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் அமித் புஸ்வெல்ல தெரிவித்தார். அத்துடன், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே நாட்டிலுள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. வட மாகாணத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார். இதேவேளை அனைத்து அரபுக் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.