கொரோனா ஒரு தொற்றுநோய்: WHO அறிவிப்பு

கொரோனா ஒரு தொற்றுநோய்: உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு

by Staff Writer 12-03-2020 | 9:05 AM
Colombo (News 1st) ​கொரோனா வைரஸானது ஒரே தடவையில் பல நாடுகளில் பரவும் தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. சீனாவுக்கு வௌியே கடந்த 2 வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று 13 மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர், வைத்தியர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சில மணித்தியாலங்களில், உணவு நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்த்த அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடுவதாக இத்தாலி பிரதமர் Giuseppe Conte தெரிவித்துள்ளார். இத்தாலியில் பாடசாலைகள், உடற்பயிற்சி நிலையங்கள், அருங்காட்சியங்கள், களியாட்ட விடுதிகள் என்பன ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. Covid - 19 தொற்றினால் இத்தாலியில் இதுவரை 827 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 12000 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கண்காணிப்பு மத்திய நிலையங்களை நாடு முழுவதும் ஸ்தாபிப்பதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன் இந்தியாவிற்கான அனைத்து விசாக்களும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நிறுத்திவைக்கப்படடுள்ளன. இராஜாங்க அதிகாரிகள், ஐ.நா. அல்லது சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள், பணி நிமித்தப் பயணம், அலுவல் திட்ட ரீதியான விசாக்களை தவிர்த்து ஏனையஅனைத்து விசாக்களும் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மூடுவதற்கும் ஜம்முவிலுள்ள அனைத்து திரையரங்குகளை மூடுவதற்கும் நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 67 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனிடையே, மலேசியாவில் Covid -19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் அனுமதி மறுக்கப்படுவதாக மலேசியா அறிவித்துள்ளது. நாளை முதல் நாடு திரும்பும் மலேசிய பிரஜைகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து வருகை தரும் வணிக விமானங்களுக்கு குவைத் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தடை விதித்துள்ளது. அத்துடன், நாளை (13) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 29 ஆம் திகதி முதல் தொழில் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என குவைத் அறிவித்துள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள 11 நாடுகளிலுருந்து வருகை தரும் விமானங்களுக்கு லெபனான் தடை விதித்துள்ளது. இதுவரை 118 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸினால் 121,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4380 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.