உலகளாவிய தொற்றுநோய் கொரோனா

உலகளாவிய தொற்றுநோய் கொரோனா 124 நாடுகளுக்கு பரவல்

by Bella Dalima 12-03-2020 | 8:02 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்குதலை உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 124 நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் பரவியமையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4600 ஆக அதிகரித்துள்ளது. 1,26,490 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 68,315 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றமையால், கொரோனா பரவுவது வெகுவாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தானபத்தின் பிரதானி டெட்ரோஸ் அடனோன் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா நோயாளர்கள் பதிவாகும் தொகை குறைவடைந்து காணப்படுவதுடன், கடந்த 2 ஆம் திகதியிலிருந்து தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களின் தொகை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி சீனாவில் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் தொகையாக 57,805 பதிவாகியிருந்தது. இன்று அந்தத் தொகை 16,831 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த நிலை காரணமாக சீனாவில் மீண்டும் வங்கி மற்றும் பொதுச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீனாவில் நிலைமை வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில், இத்தாலியில் பாரதூரமான நிலையே தொடர்கின்றது. இன்றைய தினம் அந்நாட்டில் 12 ,462 பேர் நோய் தாக்கத்திற்குள்ளாகியதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 827 ஆக பதிவாகியுள்ளது. இத்தாலியில் தொற்றுக்குள்ளானவர்களில் 44 வீதமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் நோய்த்தொற்றுக்குள்ளானவர்களில் 5 வீதமானவர்களே உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. கொரோனாவின் தாக்கம் காரணமாக இத்தாலி , தென் கொரியா , சீனா மற்றும் ஈரானுடனான அனைத்து விமான சேவைகளையும் லெபனான் இடைநிறுத்தியுள்ளது. கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக ஈரான் பதிவாகியுள்ளது. ஈரானில் 9000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 354 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் 7,869 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டு 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கொரோனாவின் தாக்கம் காரணமாக இலங்கை உட்பட சில நாடுகளின் பிரஜைகளின் வருகைக்கு சவுதி அரேபியா தற்காலிகத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள், சுவிட்ஸர்லாந்து , இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கே இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைத் தவிர மேலும் சில நாடுகளின் பிரஜைகள் வருகை தருவதற்கு குவைத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அங்கு அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. எல் சல்வடோர், பனாமா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தியா , மியன்மார் ஆகிய நாடுகளின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. கேரளாவில் தொற்று இனங்காணப்பட்டமையைத் தொடர்ந்து இந்தியாவில் மேலும் இரண்டு பிராந்தியங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை, ஹொலிவுட்டின் பிரபல நட்சத்திரமான டொம் ஹான்க்ஸ் மற்றும் அவரின் மனைவி ரீடா வில்சன்ட் ஆகியோர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நோய்த்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். ஹொலிவுட்டின் மற்றுமொரு பிரபல நட்சத்திரமான ஜோன் ட்ரவொல்டாவும் வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ தயாராகி வருகின்றார். தமது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இதேவேளை, அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கிப் பயணிக்கும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரித்தானியாவிற்கு தடை விதிக்கப்படவில்லை. நாளை முதல் 30 நாட்களுக்கு இந்தத் தடை அமுலில் இருக்கும். ஜெர்மனியில் கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1567 ஆக அதிகரித்துள்ளது. சனத்தொகையில் 58 மில்லியன் பேரை தொற்று தாக்கும் அச்சம் காணப்படுவதாக சான்சலர் மேர்கல் தெரிவித்துள்ளார். ஸ்வீடன், பல்கேரியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கயானா மற்றும் துருக்கியில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.