கூட்டமைப்பினர் திருமலையில் சந்திப்பு; வேட்பாளர் நியமனம் இழுபறியில்

கூட்டமைப்பினர் திருமலையில் சந்திப்பு; வேட்பாளர் நியமனம் இழுபறியில்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2020 | 8:41 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெற்றது.

திருகோணமலையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் வீட்டில் கூட்டம் இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் பட்டியல் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் ​தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு இதுவரை முற்றுப்பெறவில்லை.

பங்காளிக் கட்சிகளான PLOTE, TELO-வின் வேட்பாளர் நியமனங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் நியமனம் இழுபறியிலுள்ளது.

எனினும், திருகோணமலையில் இன்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் பூரணப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், எஸ்.ஶ்ரீதரன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் புதிய வேட்பாளர்களை களமிறக்கும் நடவடிக்கை இழுபறியிலுள்ளது.

எனினும், யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் வேதநாயகம் தபேந்திரன் போட்டியிடவுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியினை இராஜினாமா செய்ததன் பின்னர் ஒரு கட்சியிடமிருந்து அழைப்பு கிடைத்ததாக அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தார்.

எனினும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எதுவித கருத்தினையும் கூற முடியாது என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் பாாாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், எஸ்.ஶ்ரீநேசன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

எனினும், மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல ஆகிய ​தேர்தல் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவு இதுவரை பூரணபடுத்தப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ச.குகதாசன் போட்டியிடவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற கட்சியின் வேட்பாளர் நியமனக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஏழு ஆசனங்க ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாவிதன்வௌி பிரதேச சபை தவிசாளருமான தவராஜா கலையரசன் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்