Road Safety தொடர்: இந்திய லெஜன்ட்ஸ் அணி வெற்றி

Road Safety கிரிக்கெட் தொடர்: இந்திய லெஜன்ட்ஸ் அணி வெற்றி

by Staff Writer 11-03-2020 | 2:28 PM
Colombo (News 1st) Road Safety கிரிக்கெட் தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. வீதிப் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கிரிக்கெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பை படேல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி சார்பாக அணித்தலைவர் திலகரட்ன டில்ஷான் 23 ஓட்டங்களை பெற்றார். மத்திய வரிசையில் ச்சாமர கபுகெதர 23 ஓட்டங்களை பெற்றார். இலங்கை லெஜன்டஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களை பெற்றது. முனாப் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய லெஜன்ட்ஸ் அணி சார்பாக விரேந்திர ஷேவாக் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் ஷமிந்த வாஸின் பந்துவீச்சில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் ஓர் ஓட்டத்துடன் வெளியேறினார். மொஹமட் கைப் 46 ஓட்டங்களை பெற்றார். இர்பான் பதான் 3 சிக்சர்கள் 6 பவுன்டரிகளுடன் 31 பந்துகளில் 57 ஓட்டங்களை விளாசி வெற்றியை உறுதி செய்தார். இந்திய லெஜன்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியிலக்கை கடந்தது. ஷமிந்த வாஸ் 2 விக்கெட்களை வீழ்த்தியதுடன் ரங்கன ஹேரத் சசித்திர சேனாநாயக்க ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். அணிகளின் தரப்படுத்தலில் இந்திய லெஜன்ட்ஸ் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இலங்கை லெஜன்ட்ஸ் அணி 2 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை லெஜன்ட்ஸ் அணி தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.