17 மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களில் பொதுஜன பெரமுன கையொப்பம்

17 மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களில் பொதுஜன பெரமுன கையொப்பம்

17 மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களில் பொதுஜன பெரமுன கையொப்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 8:52 pm

Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இன்று 17 தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்புமனு தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விஜேராம இல்லத்தில், மாவட்ட தலைமை வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர்.

மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வேட்புமனுக்களில் கையொப்பமிடப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இன்று முற்பகல் 11 மணிக்கு சுப வேளையில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டார்.

கொழும்பு மாவட்டத்திற்காக தினேஷ் குணவர்தனவும் கம்பஹா மாவட்டத்திற்காக பிரசன்ன ஜயவர்தனவும் களுத்துறை மாவட்டத்திற்காக ரோஹித்த அபேகுணவர்தனவும் மாத்தறை மாவட்டத்திற்காக டலஸ் அழகப்பெருமவும் வேட்பாளர் குழுவின் தலைவர்களாக கையொப்பமிட்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்திற்காக வாசுதேவ நாணயக்கார வேட்புமனுவில் கையொப்பமிட்டதுடன், காலி மாவட்டத் தலைவராக ரமேஷ் பத்திரன கையொப்பமிட்டார்.

கண்டி மாவட்டத்திற்கான வேட்பு மனுவில் மஹிந்தானந்த அளுத்கமகே கையொப்பமிட்டதுடன், நுவரெலியா மாவட்டத்திற்கான வேட்பாளர் அணியின் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

புத்தளம் மாவட்டத்திற்காக சனத் நிஷாந்தவும், மொனராகலை மாவட்டத்திற்காக சஷீந்திர ராஜபக்ஸவும், பதுளை மாவட்டத்திற்காக நிமல் சிறிபால டி சில்வாவும் அனுராதபுரம் மாவட்டத்திற்காக எஸ்.எம்.சந்திரசேனவும் திருகோணமலை மாவட்டத்திற்காக சுசந்த புஞ்சிநிலமேவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்காக நாமல் ராஜபக்ஸவும் வேட்புமனுக்களில் தொடர்ந்து கையொப்பமிட்டனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்பு மனுவில் காதர் மஸ்தானும் கேகாலை மாவட்டத்திற்கான வேட்புமனுவில் கனக ஹேரத்தும் கையொப்பமிட்டனர்.

பொலன்னறுவை, திகாமடுல்லை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் இன்று கைச்சாத்திடப்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்