வன்னியில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் நெருக்கடி

வன்னி மாவட்ட வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நெருக்கடி

by Staff Writer 11-03-2020 | 8:07 PM
Colombo (News 1st) வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு சுமூக தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் தலைமையில் மன்னாரில் நேற்று (10) நடைபெற்றது. இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பின்வருமாறு தெரிவித்தார்,
மன்னாரில் கிறிஸ்தவ மக்கள், இந்து மக்கள் என பிரிந்திருக்கின்ற நிலைமை துரதிர்ஷ்டவசமானது. சைவ வேட்பாளர் ஒருவரை இதுவரையில் அறிமுகப்படுத்த அல்லது அடையாளப்படுத்த முடியாத நிலையில் எங்களுடைய குருமார்கள் தரப்பில் அவரை ஆதரித்திருப்பவர்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்றவொரு கருத்தை முன்வைத்திருக்கின்றார்கள். கூடி எடுக்கின்ற தீர்மானத்தில் எந்த பிளவிற்கும் இடமில்லாமல், சுயேட்சை என்று செல்லாமல் எங்களோடு இணைந்து எடுக்கக்கூடிய தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன்
இந்நிலையில், தமிழரசுக் கட்சி தமக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்க மறுத்துவிட்டதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் மகா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார். மேலும், தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியை நம்பி ஏமாறத் தயாரில்லை எனவும் சுயேட்சையாக தமது பயணம் தொடரும் எனவும் மகா தர்மகுமார குருக்கள் குறிப்பிட்டார். இதேவேளை, கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாக அல்லது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாவட்டத்தின் கொள்கை அல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட மக்களுக்கு ஆயர் கடந்த 8 ஆம் திகதி அனுப்பிவைத்த திருமடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.