கொரோனா: தென் கொரியா விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ்: தென் கொரியா விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்

by Staff Writer 11-03-2020 | 1:47 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இன்றையதினம் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அழைப்பு நிலையமொன்றின் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இன்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 242 புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 நாட்களாக தொற்று பரவும் வீதம் குறைவடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொரிய நோய்த்தடுப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தென் கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,755 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடீன் டொரீஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இவரென்பதுடன், தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அறிவுறுத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாம் பின்பற்றிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வீட்டில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பிரித்தானியாவில் கொரோனாவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 382 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.