கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கைப் பிரஜை அடையாளம் காணப்பட்டார்

by Staff Writer 11-03-2020 | 9:02 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கைப் பிரஜை நாட்டில் பதிவாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். கொட்டாவை பகுதியைச் சேர்ந்த இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் IDH எனப்படும் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று பிற்பகல் உறுதியாகியுள்ளதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் அவரின் நிலைமை பாரதூரமாக இல்லையென IDH வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது அவரின் குடும்பத்தினரும், அவர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு குறித்த நபர் வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நோயாளி, கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். இதேவேளை, குறித்த இத்தாலி சுற்றுலாக் குழு பயணித்த இடங்கள் மற்றும் அவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் மேலும் பரவாதிருப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று பரவாதிருப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதன்பிரகாரம், வைரஸ் தொற்று பரவிவரும் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து நாட்டை வந்தடைவர்களை கண்காணிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குமாறு வௌிநாடுகளிலிருந்து வரும் நபர்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.