வேட்பாளர் தெரிவு குறித்து பிரித்தானிய கிளை கவலை

கிழக்கில் வேட்பாளர் தெரிவு தனிநபர் ஆதிக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை கவலை

by Staff Writer 11-03-2020 | 8:22 PM
  Colombo (News 1st) அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஒருசில தனிநபர்களின் ஆதிக்கத்தின் பேரில் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை கவலை தெரிவித்துள்ளது. தகுதியான பெண் வேட்பாளர்கள் இருந்தும் தமிழ் தேசியத்திற்கு எதிரான சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற பெண், தனிப்பட்ட சிபாரிசில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இழுக்கு என லண்டனில் வாழும் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கூடி முடிவுகளை எடுக்க முன்பு வடக்கிலும் கிழக்கிலும் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களைக் கேட்டறிந்து தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என அவர்கள் தம்மிடம் அறிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை செயலாளர் வே.ஜெ.போஸ் அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் இருந்தும் செயலாற்றாத பலரை மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்யும் கட்சியின் முடிவு தொடர்பிலும் அதில் அதிருப்தி வௌியிடப்பட்டுள்ளது.