ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் தாமதம்

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 8:39 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்குமா?

அரசாங்கத் தரப்பில் இந்த விடயத்தில் மீண்டும் முரணான கருத்து வௌியிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் நாம் கொள்கை ரீதியிலான தீர்மானம் ஒன்றையே எடுத்தோம். அந்த கொள்கை ரீதியிலான தீர்மானத்தை குறித்த நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளோம். இங்கு கூறப்பட்டுள்ள விடயங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. செழிப்பான இலக்கு திட்டம் ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும். இந்தக் காலத்தில் பாராளுமன்றத்தில் அதிகாரம் இன்றி, பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட குறைநிரப்பு பிரேரணைக்கு கூட அனுமதி வழங்காத நிலையில், எமக்கிருக்கும் முதலாவது மாற்றுத் திட்டமே பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவது. அதன்படி செயற்பட்டுள்ளோம்

என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பள அதிகரிப்பிற்கான திட்ட வரைபொன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் கடந்த மாதமே கையளித்ததாகவும் இந்த திட்டம் தொடர்பில் அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவப் பணிப்பாளரும் முதலாளிமார் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

எனினும், தொழிற்சங்கங்களின் இழுபறியால் இதுவரை குறித்த திட்ட வரைபிற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாமற்போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நிலவும் வறட்சியால் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைவடைந்துள்ளதுடன் சில தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

கெரோனா வைரஸ் மற்றும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியால் தேயிலையின் விலை குறைவடைந்துள்ளதாகவும் இதனால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ரொஷான் இராஜதுரை மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்