பேர்ள் கே.வீரசிங்கவிற்கு மீண்டும் பிடியாணை

பேர்ள் கே.வீரசிங்கவிற்கு மீண்டும் பிடியாணை

by Staff Writer 10-03-2020 | 4:37 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே.வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பிடியாணையை நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. பிடியாணையை நடைமுறைப்படுத்த தவறினால் தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை மற்றும் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணக் கோவைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால் கடந்த 6 ஆம் திகதி பேர்ள் கே. வீரசிங்கவை கைது செய்வதற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்பதை அவர் அறிவிக்கத் தவறியதன் மூலம் மன்றுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தீர்மானித்து இன்று மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அலி ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, பேர்ள் கே.வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றம் அவருக்கு வௌிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளது.