பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் பல்கலைக்கழக மாணவர்: விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 10-03-2020 | 8:12 PM
Colombo (News 1st) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான மாணவர் பசிந்து ஹிருஷான் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் கடந்த 5 ஆம் திகதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வு இரவு 8.30 அளவில் நிறைவு பெற்றாலும் குறித்த மாணவர் உள்ளிட்ட மேலும் சில மாணவர்கள் நள்ளிரவிற்கு பின்னரும் பல்கலைக்கழகத்தில் இருந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பசிந்து ஹிருஷான் குடிநீர் அருந்துவதற்காக நீர்க்குழாய் அருகில் சென்றிருந்தபோது உயரத்திலிருந்து உருண்டு வந்த டயர் ஒன்று அவர் மீது மோதியதாக நண்பர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை பசிந்து ஹிருஷானின் நண்பர் விபரித்தாலும் அடையாளத்தை வௌிப்படுத்துவதற்கு அவர் விரும்பவில்லை.
நான் 1.20 அளவில் ஹிருஷானை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். விடுதிக்கு செல்ல வேண்டும் என கூறுவதற்காக. பெவிலியனில் நீர் அருந்துவதற்கு சென்றதாகவும் அங்கு வருமாறும் கூறினார். நான் அங்கு சென்றபோது, அவர் பெவிலியனில் நீர் அருந்துவதற்கான இடத்திலிருந்து கீழே இறங்கி வந்திருந்தார். டயர் ஒன்றுடன் மாணவர் ஒருவர் கீழே வீழ்வதைக் கண்டேன். படிக்கட்டில் உருண்டு வீழ்ந்தார்
என பசிந்து ஹிருஷானின் நண்பர் தான் கண்டவற்றைக் கூறினார்.
சிரேஷ்ட மாணவர்கள் குடிநீர் கேட்ட கதையொன்றும் உள்ளது. அவர்களுக்கு தண்ணீர் வழங்கிவிட்டு தம்பி கீழே இறங்கும் போதே அந்த பெரிய டயரை தம்பியை நோக்கி அனுப்பியுள்ளனர். அது ஒருவரால் உருட்டிவிடக் கூடிய டயர் அல்ல. இருவர் அல்லது மூவர் இணைந்து உருட்டக்கூடிய டயராகவே அதனை நான் காண்கின்றேன். 25 அடியுள்ள பெவிலியனில் அதிக வேகத்தில் வேண்டுமென்றே இதனை உருட்டிவிட்டிருப்பதாகவே காண முடிகிறது
என பசிந்து ஹிருஷானின் சகோதரர் குறிப்பிட்டார். உடுகம்பொல சென். பீட்டர்ஸ் கல்லூரியில் உயர் கல்வி கற்ற பசிந்து ஹிருஷான், 2018 ஆம் ஆண்டு 3A சித்திகளுடன் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தார். அவர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் இணைந்தார். இந்த விபத்திற்கு பகிடிவதை காரணமாக அமையவில்லை என மாணவர் சங்கங்கள் கூறுகின்றன.
இந்த சம்பவம் தௌிவாகவே பகிடிவதையுடன் தொடர்புபடவில்லை. அதனை நாம் தௌிவாகக் கூறுகின்றோம். பல்கலைக்கழக கட்டமைப்பில் இருந்து பகிடிவதையை பெரும்பாலும் ஒதுக்குவதற்கு எம்மால் முடிந்துள்ளது. முற்றாக பகிடிவதையை நிறுத்த முடியும் என எம்மால் கூற முடியாது. இன்றும் சில பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறலாம்
என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் உதார சந்தருவன் தெரிவித்தார். எவ்வாறாயினும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் நேரடி கண்காணிப்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவ மாணவியர் கட்டாயம் அடையாளம் காணப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு கட்டாயமாக சாட்சியங்கள் இருக்கும் என நான் நம்புகிறேன். சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று எழுத்தமூலம் கோரிக்கை விடுத்தது
என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடக்கின்றன. முதலாவது பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளக விசாரணை நடத்துகின்றார். அடுத்தது, பிள்ளையின் பெற்றோர் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு தரப்பினர் பகிடிவதையில் ஈடுபட்டு உடல் ரீதியாக உளரீதியாக அழுத்தம் கொடுத்திருந்தால் சாட்சியங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்போம்
என உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.