இத்தாலியில் விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்

சகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த இத்தாலி தீர்மானம்

by Staff Writer 10-03-2020 | 7:29 AM
Colombo (News 1st) இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் பல நாடுகளை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸினால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி பாரியளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், தமது நாட்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தமது நாட்டு விளையாட்டுக் கழகங்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக இத்தாலி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் நடைபெறும் கால்பந்தாட்டம், றக்பி, டென்னிஸ் மற்றும் போர்மியூலா 1 கார்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் கடந்த சில நாட்களாக ரசிகர்களது பங்குபற்றுதலின்றி நடைபெற்று வருகின்றது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிலான் மற்றும் ஜுவான்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியை நேரடியாக கண்டுகளிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு அற்றுப்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.