கொரோனாவின் கோரத்தாண்டவம்

கொரோனாவின் கோரத்தாண்டவம்

by Bella Dalima 10-03-2020 | 4:26 PM
Colombo (News 1st)  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் நேற்று மேலும் 17 பேர் பலியானதை அடுத்து, அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர். சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 80,735 ஆக இருந்தாலும், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. எனவே, அங்கு இந்த நோய்க்காக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வைரஸின் பிறப்பிடமான வுஹான் நகரில் 11 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர், சிகிச்சைக்கு பிறகு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியவர்களையே கொரோனா வைரஸ் எளிதில் பலிகொள்கிறது. இந்த நிலையில், சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர், சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வுஹான் நகரைச் சேர்ந்த அந்த முதியவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 24 ஆம் திகதி அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த முதியவருக்கு கொரோனா தாக்குதல் தவிர, அல்சைமர் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் போன்றவையும் இருந்துள்ளன. எனினும், தொடர்ந்து 13 நாட்களாக நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் மற்றும் சீன பாரம்பரிய மருத்துவ முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பலனாக அவர் பூரண குணமடைந்து கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். இதன் மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கு வெளியே இத்தாலி அதிக உயிரிழப்கை சந்தித்துள்ளது. தவிர ஈரான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 1,10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஜெர்மனியிலும் கனடாவிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஜெர்மனியில் முதன்முதலாக இருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் முதல் பலியாக முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9172 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இத்தாலியில் வசிக்கும் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவுவதைத் தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே (Giuseppe Conte) அறிவித்துள்ளார். பொதுமக்கள் அவசரத் தேவையன்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு பணிக்களுக்காக இத்தாலி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் பிரான்சிஸ் கொரோனா பீதி காரணமாக தனது சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தியுள்ளார். அவரது பிரார்த்தனை நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது. 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனைக் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய்த்தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனைக் கூட்டங்களைத் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் 36 மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஒரேகான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழு தலைவரும் வடக்கு கரோலினா பிரதிநிதியுமான மார்க் மீடோஸ் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் அவர் தொடர்பில் இருந்ததால் அவருக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும், முன்னெச்சரிக்கையாக அவர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகிறார். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாளிகையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபேலோ டி சௌசா (Marcelo Rebelo de Sousa) அறிவித்துள்ளார். போர்ச்சுக்கலில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, போர்ச்சுக்கல் அதிபர் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துவிட்டு வீட்டிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், பங்களாதேஷில்  3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளிவைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கு 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம், ஜம்மு, கர்நாடகாவில் பெங்களூர், பஞ்சாப் மற்றும் புனே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.