சமயம் சார்பான கட்சி, சுயேட்சை குழு அவசியமற்றது

சமயம் சார்பான கட்சி அல்லது சுயேட்சை குழு அவசியமற்றது - மன்னார் ஆயர் வலியுறுத்தல்

by Staff Writer 09-03-2020 | 9:40 PM
Colombo (News 1st) சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு ஆண்டகை எழுதிய தவக்கால திருமடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாக அல்லது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறைமாவட்டத்தின் கொள்கை அல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருமடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இத்தருணத்திழல் தமிழ் மக்களுக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் வாக்களிக்கும் உரிமையாகும் என இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறிப்பிட்டுள்ளார் முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழம்பிப்போய் உள்ளதாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் மக்கள் இந்தப் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டியவர்களாக இருப்பதாகவும் மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை எழுதிய திருமடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமய அடிப்படையில் கட்சியாகவோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.